கட்டுரை

ராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சோனியா?

செங்குட்டுவன் தம்பி

ராகுல் காந்தி ஏன் தோற்றார் என்பது பற்றி பக்கம் பக்கமாக எழுதி முடித்தாகிவிட்டது. புதிதாக என்ன இருக்கிறது? என்று கேட்கலாம்.

அரசியலைத் தாண்டி நிர்வாகவியல் கோணத்தில் காங்கிரஸின் தோல்வியை அலசிப்பார்ப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

1.மார்ச், 2004 - இல் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, செப்டம்பர் 200 - இல் காங்கிரஸின் பொதுச் செயலாளர்களில் ஒருவராகிறார். கோபக்கார இளைஞராக அறிமுகமான ராகுல், காங்கிரஸின் மாணவர்கள் அமைப்பு (NSUI) மற்றும் இளைஞர் காங்கிரஸை (IYC) பலம்வாய்ந்ததாக மாற்றுகிறேன் என்று ஆரம்பிக்கிறார். இரு அமைப்புகளிலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்போகிறேன் என்று ஆரம்பித்து முடியாமல் கைவிடுகிறார். ஜனவரி 2013 - இல் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் துணைத் தலைவராக உயர்வு பெறும் ராகுல், இடைப்பட்ட 9 வருடங்களில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. மே 2011 - இல், மாயாவதி அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் சோனியா  காந்தி ராகுலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து படிப்படியாக முக்கிய பொறுப்புகளைக் கொடுத்திருந்தால், அனுபவத்தையும், நம்பகத்தன்மையையும் பெற்றிருப்பார். சிறப்பான ஆட்சியை ராகுல் கொடுப்பார் என்று எப்படி நம்புவது என்பது தான் இன்றைய இளைஞர்களின் முக்கிய கேள்வி. இந்த கேள்விக்கான பதில் ராகுலிடம் இல்லாமல் போனதற்கான காரணம் சோனியாதான்.

 2.காங்கிரஸ் ஜெயிக்கவில்லை என்று சொல்வதைவிட வளரவில்லை என்பது தான் சரியான கூற்று. 2014 - இல் 10.69 கோடி ஒட்டுகள் பெற்ற காங்கிரஸ், ராகுலின் தலைமையில் 11.68 கோடி ஓட்டுகள் பெற்றிருக்கிறது. இது வளர்ச்சி இல்லையா என்று காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் தனிப்பட்ட உரையாடலில் தெரிவித்தார். காங்கிரஸின்  வளர்ச்சியை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் 1984&க்கு போக வேண்டும்.

இந்திரா காந்தியை இழந்த நிலையில் நடந்த தேர்தல் அது. பாஜகவுக்கு மிக மோசமான தேர்தலும் அதுதான். 1984 - இல் காங்கிரஸ் 11.54 கோடி ஓட்டுகள் பெற்றது. இரண்டாவது வந்த கம்யூனிஸ்ட் 2.01 கோடி ஓட்டுகள் பெற்றது (வலது + இடது). மூன்றாவது வந்த பாஜக 1.82 கோடி ஓட்டுகள் பெற்றது. 1984 - இல் திமுக 56.95 லட்சம் ஓட்டுகள் பெற்றது.

2019&இன் ஓட்டு விபரத்தைப் பார்த்தால் பாஜக 22.90 கோடி வாக்குகள், காங்கிரஸ் 11.90 கோடி வாக்குகள், திமுக 1.38 கோடி வாக்குகள். கடந்த 35 ஆண்டுகளில் பாஜக&வின் வாக்கு எண்ணிக்கை 12.58 மடங்கு உயர்ந்திருக்கிறது. காங்கிரஸின் வாக்கு விகிதம் 3.47% தான் உயர்ந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் திமுகவின் வாக்கு சதவீதம் 2.42 மடங்கு உயர்ந்துள்ளது. இன்னும் பழம்பெருமை பேசினால் போதாது, அடிப்படையான பலநூறு விஷயங்கள் சரிபார்க்கப்பட வேண்டிய சூழல் இது.

3.''என் தந்தை இந்தியாவின் பிரதமரானதன் மூலம் அரசியல் ரீதியான தவறு செய்துவிட்டார். சில மாதங்கள் பிரதமர் ஆனதன் மூலம் கர்நாடகாவின் மீதான அவரது கண்ட்ரோலை இழந்துவிட்டார். நாம் திமுகவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மாநிலத்தை உங்கள் கட்டுப்பாட்டில் (Hold) வைத்திருப்பதன் மூலம் மத்திய அரசில் உங்கள் அதிகார பகிர்வை பேசிப்பெற்றுக் கொள்ளலாம்,''& கர்நாடக முதல்வர் குமாரசாமி
வெளிப்படையாகக் கூறிய ஒப்புதல் வாக்குமூலம் இது. இந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்ட தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் சரியான கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தும். களநிலவரத்தை புரிந்துக்கொள்ளாத கூட்டணிப் பேச்சுவார்த்தையிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக வேண்டும். 2019 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பி.எஸ்.பி, சமாஜ்வாடி கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) ஆகிய கட்சிகள் கூட்டாக பெற்ற வாக்கு சதவீதம் 17.15%. முயற்சி செய்திருந்தால் இதில் சிலரோடு காங்கிரஸால் உடன்பாடு செய்திருக்க முடியும். இதில் அமித்ஷா காங்கிரஸை விட மின்னல் வேகத்தில் செயல்படுகிறார். காங்கிரஸின் எதிர்காலம் கூட்டணி கட்சிகளின் கையில்தான் இருக்கிறது.

4. வாரிசு அரசியல் இந்தியாவில் எடுபடாது என்பது பொய்யானது. இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின், ஜெகன்மோகன், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக் ஆகியோர் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மூவர் மோடி அலையை எதிர்த்து வென்றுள்ளனர். இவர்களது கட்சிகள் 8.55% வாக்குகளைப் பெற்றுள்ளன. அகில இந்தியாவில் காங்கிரஸ் பெற்றவாக்குகளில் 44 சதவீத வாக்குகளை இவர்கள் நால்வரும் சேர்ந்து பெற்றுள்ளனர். வாரிசு அரசியல் என்பதை விட மக்கள் முன்பு வைக்கப்படும் பிரச்சாரங்களும் தொண்டர்களை முன்னிறுத்திச் செய்யப்படும் கள அரசியலும் முக்கியமானவை.

5. ஊடகங்களை பாஜக கையகப்படுத்தியதால் தோற்றோம் என்பது காங்கிரஸில் பலரது வாதமாக இருக்கிறது. இது சரியா தவறா என்ற வாதத்துக்குப் போகவேண்டாம். இதை மீறி ஜெயிக்கமுடியுமா என்றால் முடியும். முதல் பக்கம் செய்தி ஆவதற்கு சில தந்திரங்கள் தேவை. மோடியைக் கட்டிப்பிடித்த நாளில் எல்லா ஊடகங்களிலும் ராகுல்தான். முயற்சி செய்தால் ராகுல் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து முதல் பக்கத்தில் இருக்கலாம். அவர் தன் பாட்டியின்
உத்திகளை கொஞ்சம் ஆராயவேண்டும். கூடுதலாக வாட்ஸப், முகநூல் இல்லாத காலத்தில், ஊடகங்கள் எமர்ஜென்ஸியால் மௌனிக்கப்பட்ட காலத்தில் ஜனதா வென்ற வரலாற்றை ஊன்றிப் படிக்கவேண்டும்.

6. புதியவர்களை ஈர்க்கவும் திறமையானவர்களைத் தக்கவைக்கவும் காங்கிரஸுக்குள் ஏதோ தடுத்துக்கொண்டிருக்கிறது. வலிமையான மாநிலத் தலைமைகளோ அல்லது கூட்டணித் தலைவர்களோ காங்கிரஸுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கமுடியும். காங்கிரஸில் இந்நாள் அதிருப்தியாளர்கள், முன்னாள் தலைவர்கள் பட்டியல் அமித்ஷா கையில் இருக்கிறது. காங்கிரஸ் பயன்படுத்தத் தவறுவதை ஷா பயன்படுத்துகிறார் என்ற பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் உள்ளது.

'If you know the enemy and know yourself, your victory will not stand in doubt; if you know heaven and know earth make your victory complete'  என்ற சன் ட்சூவின் வார்த்தைகளைக் கொண்டு செயல்படும் காங்கிரஸ் தலைவர் அமைந்தால் வரலாற்றை மாற்றி எழுதலாம்.

ஜூலை, 2019.